மும்பை: வாடகைத்தாய் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டினார் நடிகர் ஷாரூக்கான்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும், சுகானா என்ற மகளும், ஆர்யான் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கான்- கவுரி தம்பதி இன்னொரு குழந்தை வேண்டும் என விரும்பினர்.
ஆனால் கவுரி கர்ப்பமாகி குழந்தை பெறுவதை விரும்பவில்லை. வாடகை தாய் மூலம் கணவருக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்தார். ஆகவே, லண்டனில் வசிக்கும் கவுரியின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை மும்பை வரவழைத்து அங்குள்ள மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்தனர்.
வாடகைத் தாய் மூலம் ஷாரூக் குழந்தை பெறும் விவரம் சமீபத்தில்தான் வெளியில் வந்தது.
குறிப்பிட்ட காலத்துக்கு 2 மாதத்துக்கு முன்பே வாடகைத் தாய்க்கு குழந்தை பிறந்தது. குறைப் பிரசவம் என்பதால் மும்பை மருத்துவமனையில் வைத்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தை தேறியதும் குழந்தையை ஷாருக்கான் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். வாடகைத் தாய் லண்டன் திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மும்பை மாநகராட்சியில் ஷாருக்கான் விண் ணப்பித்து இருந்தார். மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து ஆவணங்களை சரி பார்த்தனர். ஷாருக்கான் வீட்டுக்கு நேரில் சென்று குழந்தையை பார்த்த பின்னர் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மூலம்தான் ஷாருக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த தகவல் வெளியே அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த ஷாரூக், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ,"எனக்கு புதிதாக பிறந்த குழந்தை பற்றி பல்வேறு விதமான பேச்சுகள் உலா வருகின்றன. பல மாதங்கள் குறை பிரசவத்தில் இருந்த குழந்தை கடைசியாக என் வீட்டுக்கு வந்து விட்டான். நான், என் மனைவி கவுரி மற்றும் குடும்பத்தினர் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் நீண்ட நாட்கள் மவுனம் காக்க விரும்பவில்லை.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஆணா? பெண்ணா? என்று சோதனை செய்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த பின்புதான் அது ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டேன். வீட்டுக்கு வந்த பின்பு ‘அப்ராம்' என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வருகிறோம். என் குழந்தையை சிறப்பாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள், நர்சுகள் அனைவருக்கும் நன்றி. இது என் குடும்ப விவகாரம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள்,''என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment