தமிழ் சினிமா தயாரிப்பின் மையம் என்றால் அது சென்னை கோடம்பாக்கம்தான் என்ற நினைப்பை இனி மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் வந்துவிட்டது.
சென்னை தவிர்த்து வேறு இடங்களிலும் தமிழ் சினிமாக்கள் உருவாகும் சூழல் எழுந்துள்ளது. அவ்வளவு ஏன்.. பல படங்கள் ஏற்கெனவே உள்ளூரில் எடுக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டும் உள்ளன.
மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கும் தமிழ்ப் படங்களை இதில் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைநகர்களில் இப்போது புதிய படங்களை அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் ஹொசமுங்காரு என்ற படுகர் மொழி திரைப்படம் ஊட்டியில் தயாராகி, அங்கேயே வெளியானது. அடுத்து கவ்வ தேடி என்ற படமும் படுக மொழியில் ஊட்டியிலேயே தயாரானது. சமீபத்தில் சின்னதபூமி என்ற படுகப் படம் ஊட்டியிலேயே தயாராகி வெளியானது.
அடுத்து கோவையில் சிலர் படங்களைத் தயாரித்து, உள்ளூரிலேயே வெளியிட்டனர். புதுவையிலும் சினிமா தயாரித்து அங்கேயே வெளியிடும் முயற்சிகளை புதுவை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனாலும் இவையெல்லாம் சிறு முயற்சிகளாகவே உள்ளன.
ஆனால் மதுரை சினிமாக்காரர்களோ, இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
உண்மையாகவே சிறு முதலீட்டில் படங்கள் எடுத்து, அவற்றை உள்ளூரில் கிடைக்கிற அரங்குகளில் வெளியிடுவதுதான் அவர்கள் நோக்கம். சென்னையையோ, கோடம்பாக்கத்தையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை (இன்னும் எத்தனை நாளைக்கு கோடம்பாக்கம் பார்ட்டிகளிடம் எடுபிடியாக இருந்து, நொந்து நூலாகி வாய்ப்பு தேடுவது!!).
ஆர்வமுள்ள நான்கைந்து இளைஞர்களும், சினிமா நுட்பம் தெரிந்த சிலரும் ஒன்று சேர்ந்து முதலிட்டு, உள்ளூரில் உள்ள நடிகர்களையே பயன்படுத்தி மதுரைமற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய படங்களை உருவாக்குவதுதான் இவர்கள் பாணி.
இன்றைய தேதிக்கு மதுரையில் 15-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழில் பிரபலமாக உள்ள சில குணச்சித்திர நடிகர் நடிகைகளும் கூட இவற்றில் நடித்து வருகின்றனர். அதிக நாள் கால்ஷீட் தேவையில்லையாம். நான்கைந்து நாட்கள் கால்ஷீட், பத்தாயிரம் ரூபாய்க்குள் சம்பளம். இந்த பார்முலாவில்தான் 'மதுரைப் படங்களைத்' தயாரிக்க முயன்றுள்ளனர்.
எளிதில் எங்கும் கிடைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம், இவர்களை சென்னை ஸ்டுடியோக்கள் பக்கம் போக வேண்டிய அவசியத்தைக் கூட ஏற்படுத்தவில்லை.
இந்த பாணியில் எடுக்கப்பட்ட 'மதுரை விடிஞ்சா போச்சு' என்ற படம் இன்று வெளியாகிறது. இதுபோன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் உள்ளன.
Post a Comment