சென்னை: சினிமாவை வெறும் படமாக மட்டும் பாருங்கள் அதனை வாழ்க்கையோடு முடிச்சுப் போட்டு, சினிமாவில் நடிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களை அரியணையில் வைத்துக் கொண்டாடாதீர்கள் என்று நடிகை ரோகினி சுள்ளென்று கூறியுள்ளார்.
பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற உணர்வு அவரின் பேச்சைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
திருவாரூரில் நடந்த தேசிய நெல் விழாவில் கலந்துகொண்ட நடிகை ரோகினி "பூச்சிகளும் நண்பர்களே" என்னும் தலைப்பிலான புத்தகம் ஒன்றை வெளியிட்டுப் பின்வருமாறு பேசினார்.
"படத்தில் நடிகர் சூர்யா அடிப்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ளும் நீங்கள் நிஜத்தில் அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் குறித்து அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.
சினிமாவில் நாங்கள் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் நகைகள் எப்படி எங்களுடையது இல்லையோ அதே போன்று தான் நாங்கள் பேசும் வசனங்களும் எங்களுடையது கிடையாது, யாரோ ஒருவர் எழுதிக் கொடுக்க நாங்கள் அதனைப் பேசிச் செல்கிறோம்.
சினிமாவில் நாலு காட்சி பார்த்தோமா அதோடு அதனை மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விட வேண்டும், அதனை விடுத்தது அதில் நடித்தவர்களை அரியணையில் தூக்கி வைத்துக் கொண்டாடக் கூடாது.
சினிமா என்பது அனைவரையும் கவரும் ஒரு ஊடகமாக இருப்பதால் நாங்கள் என்ன பேசினாலும் அது மற்றவர்களுக்கு பளிச்செனத் தெரிகிறது எனவே இதனை உண்மை என்று நம்பி ஏமாறாதீர்கள் என்று அவர் உண்மையைச் சற்று உரக்கக் கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார்.
நல்ல பேச்சு, நாகரிகமான அறிவுரை.......!
Post a Comment