12/22/2010 2:33:42 PM
முதல் கணவர் ஆகாஷிடம் இருக்கும் குழந்தை விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், அரிபரந்தாமன், குழந்தை விஜய் ஸ்ரீஹரியை நீதிமன்றத்தில் 21ம் தேதி ஆஜர்படுத்த ஆகாஷுக்கு உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஸ்ரீஹரி ஆஜராகவில்லை. இதுதொடார்பாக, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆகாஷ் தரப்பு வக்கீல் இதயதுல்லா, "குழந்தை சார்பாக மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட உள்ளார். வழக்கை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும்" என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், "வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க முடியாது. ஏற்கனவே இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. மதியம் குழந்தையை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர். அதன்படி, மதியம் விஜய் ஸ்ரீஹரியுடன் ஆகாஷ் ஆஜரானார். ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.கிருஷணமூர்த்தி, வனிதா தரப்பில் வக்கீல் ஸ்ரீராம்பஞ்ச் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த வழக்கில் நாளை மறுநாள் (நாளை) தீர்ப்பு கூறப்படும்" என்று அறிவித்தனர்.
விஜயகுமார் மஞ்சுளாவுக்கு முன் ஜாமீன்
நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயகுமார் சார்பில் வக்கீல் நிர்மல், வனிதா சார்பில் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு, போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, "நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் 10,000 ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் தங்கியிருந்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். குழந்தை விஜய் ஸ்ரீஹரி விவகாரத்தில் தலையிடக் கூடாது" என உத்தரவிட்டார்.
Post a Comment