6/1/2011 10:49:29 AM
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை; இன்னும் 10 நாளில் அவர் சென்னை திரும்புவார் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்தார். கடந்த ஆண்டுக்கான பிலிம்பேர் சினிமா விருது விழா, அடுத்த மாதம் 2ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்ற தனுஷ், நிருபர்களிடம் கூறியதாவது:
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் அவர் முற்றிலும் குணமடைந்து, ரசிகர்களை சந்திப்பார். ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த மாதிரி, உற்சாகமாக இருக்கிறார். தான் நடித்த படங்களை பார்த்து ரசிக்கிறார். மருத்துவமனை வளாகத்தில் வாக்கிங் செல்கிறார்.
'ஆடுகளம்' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவ்விஷயத்தை அறிந்த அவர், 'தேசிய விருது உனக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நம்பினேன். அது கிடைத்து விட்டது' என்று சொன்னார். மூன்று நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நாங்கள்தான் இன்னும் ஒரு வாரமாவது சிங்கப்பூர் மருத்துவமனையில் தங்கி இருக்கட்டும் என்று சொன்னோம். எங்கள் அன்புக்கட்டளையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனையில் ரஜினி தியானம் செய்கிறார்.
எப்போதும் போல் உற்சாகமாக சிரித்துப் பேசுகிறார். ஜோக்குகள் சொல்கிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். இன்னும் 10 நாளில் ரஜினி பூரண குணமடைந்து சென்னை திரும்புவார். சிங்கப்பூர் மருத்துவமனை குறித்து, மும்பையில் இருந்து அமிதாப்பச்சன் எனது மாமியார் லதா ரஜினிகாந்திடம் தகவல் சொன்னார். மேலும், லட்சக்கணக்கான நல்ல உள்ளங்கள்,
ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவரைப் பற்றி வெளியாகும் வதந்திகளை, அவரது உயிரினும் மேலான ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனது உடல்நிலை குறித்து, ரஜினியிடம் இருந்து விரைவில் ரசிகர்களுக்கு அறிக்கை வர உள்ளது. சென்னை திரும்பிய பின், மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி அவர் சொல்வார். 'ராணா' படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக நடக்கும். இப்போது என் கவனம் முழுவதும் அவர் மீது மட்டுமே இருக்கிறது. அவரை பார்ப்பதற்காக இன்று அல்லது நாளை மீண்டும் நான் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன் என்றார் தனுஷ்.
Post a Comment