எனது நிறுவனத்தில் 2ஜி ஊழலில் சிக்கிய கரீம் மொரானி முதலீடு செய்யவில்லை-ஷாருக் கான்

|

Tags:


மும்பை: எனக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள திரைப்பட தயாரிப்பாளரும், சினியுக் நிறுவன அதிபருமான கரீம் மொரானிக்கும் தொழில் ரீதியிலான உறவுதான் உள்ளதே தவிர, அவர் எனது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் எந்தவிதமான முதலீடுகளும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான்.

சினியுக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார் கரீம் மொரானி. இந்த நிறுவனம் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தித் திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. சன்னி தியோல் நடித்த தாமினி, ஆமிர்கான் நடித்த ராஜா ஹிந்துஸ்தானி உள்ளிட்ட எட்டு படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

கலைஞர் டிவிக்கு டிபி ரியாலிட்டி மூலம் வந்த ரூ. 200 கோடி பணம், சினியுக் நிறுவனத்தின் மூலமாகத்தான் கிடைத்தது. இதை கடன்தொகை என்று கலைஞர் டிவி கூறுகிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனம் டிபி ரியாலிட்டி என்பதால், இது ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம்.

இதன் காரணமாகத்தான் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைதாகியுள்ளனர். தற்போது நீண்ட இழுபறிக்குப் பின்னர் கரீம் மொரானியும் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சையில் ஷாருக் கானின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. அவரது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் கரீம் மொரானி முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத் தயாரிப்பு தவிர பாலிவுட் திரைப்பட நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து தருகிறது சினியுக். 2009ம் ஆண்டு பெமினி மிஸ் இந்தியா நிகழ்ச்சியையும் இது நடத்தியது.

டிவி ஷோக்கள், கல்யாண விழாக்கள், 2008, 2009 ஐபிஎல் நிறைவு விழாக்களையும் இந்த நிறுவனம் நடத்தியுள்ளது.

பாலிவுட்டிலேயே மிகப் பெரிய பெரும் பணக்கார தயாரிப்பாளர்களாக கரீம் மொரானியும், அவரது தம்பி அலி மொரானியும் விளங்குகின்றனர்.

கரீம் மொரானிக்கும், ஷாருக் கானுக்கும் இடையிலான தொடர்புகள் இப்போது சர்ச்சையாகியுள்ளன. கரீம் மொரானியின் மகள் ஸோயா, ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவம் தயாரித்துள்ள ஆல்வேஸ் கபி கபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

அதை விட முக்கியமாக ஷாருக்கானின் கனவுப் படமான ரா ஒன் படத்தின் செயல் தயாரிப்பாளர்களில் கரீம் மொரானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ஒரு நாள் முன்புதான் கரீம் மொரானி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மொரானியுடன் தன்னை இணைத்துப் பேசப்படுவது குறித்து ஷாருக் கான் கூறுகையில்,

எனக்கும் மொரானி குடும்பத்தினருக்கும் இடையே திரைப்படம் தொடர்பான தொடர்புகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், எனது ரெட் சில்லீஸ் நிறுவனத்தில் மொரானி எந்த முதலீட்டையும் செய்யவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும். 2ஜி விவகாரத்தில் பாலிவுட் நடிகர்களை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

ஷாருக் தவிர, மொரானிக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சில பாலிவுட் நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து விளக்கம் அளித்துள்ளனர். சல்மான் கான் இதுகுறித்துக் கூறுகையில், கரீம் மொரானி நடத்தும் ஷோக்கள், நிகழ்ச்சிகளில் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர். சட்டம் இப்போது தனது கடமையை செய்து வருகிறது. அதுதான் அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நிரூபிக்கும் என்றார்.

விவேக் ஓபராய் கூறுகையில், எனக்கு கரீம் மொரானி்யைத் தெரியும். அவர் நல்ல மனிதர். என்னுடன் அவருக்கு நீண்ட கால திரைத் தொடர்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஷாருக் கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், கரீம் மொரானிக்குப் பங்கு இருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.
 

Post a Comment