6/1/2011 12:19:13 PM
'வம்சம்', 'எத்தன்' படங்களுக்கு இசையமைத்தவர் தாஜ்நூர். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர். 'மல்லுக்கட்டு', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', 'ஓம்', 'தந்திரன்' படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறார். 'வம்சம்', 'எத்தன்' பாடல்களைக் கேட்டுவிட்டு பாராட்டினார் ஏ.ஆர்.ரகுமான். அவரிடம் இருந்து வந்தவன் என்றாலும் அந்த பாராட்டு நூறு விருதுக்கு சமம். சமீபத்தில் வாலி, 'மல்லுக்கட்டு'க்கு பாடல்கள் எழுதினார். அப்போது என் டியூன்களைக் கேட்டவர், 'நீ நூர் இல்லய்யா, கோகினூர்' என்று பாராட்டினார். இவர்களின் வாழ்த்துகள், என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, ரசனையான பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்கிறார் தாஜ்நூர்.
ரீமிக்ஸ் பாடல்களை விரும்புகிறீர்களா?
ரீமிக்ஸ் பாடலுக்கு நான் எதிரி. என்னிடம் வரும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்கும்படி வற்புறுத்தியது இல்லை. ஏற்கனவே பிரபலமான ஒரு பாடலை, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றி இசையமைப்பதில் அப்படி என்ன திறமை இருக்கிறது? அதைவிட, புதிய பாடலை வித்தியாசமான இசையுடன் கலந்து கொடுக்க தயார்ப்படுத்திக் கொள்ளலாமே.
குத்துப்பாடல்கள் பற்றி..?
மக்கள் விரும்புகிறார்கள், கொடுக்கிறோம். ஆனால், குத்துப்பாடல்களுக்கு ஆயுள் குறைவு. மெலடி பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும். இதற்குமுன் சினிமாவில் சாதித்த ஜாம்பவான்களின் மெலடி பாடல்கள் பலவற்றை உதாரணமாக சொல்லலாம். இன்னொரு விஷயம், குத்துப்பாடல்கள் ஒரு இசையமைப்பாளரை உடனே உச்சத்துக்கு அழைத்துச் சென்று, ரசிகர்களிடம் பிரபலமாக்கி விடும். மெலடி பாடல்கள் மெதுவாகத்தான் ஒருவரை அடையாளம் காட்டும். ஆனால், அந்த அடையாளம் நிலையாக இருக்கும். 'வம்சம்' படத்தில் இடம்பெற்ற 'மருதாணி' பாடலும், 'எத்தன்' படத்தில் வரும் 'மழையுதிர் காலம்' பாடலும் எனக்கு அப்படியொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
நடித்திருக்கிறீர்களாமே?
'மல்லுக்கட்டு' படத்தில் இடம்பெறும் திருமண விழா பாடலில், திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் காட்சி இடம்பெறுகிறது. அதில் நடிக்க என்னை அழைத்தனர். போய் வந்தேன். நடிக்கவில்லை.
'வாய்ஸ் பேங்க்' தொடங்க போகிறீர்களாமே?
உண்மைதான். ரசிகர்களின் ரசனை அவ்வப்போது மாறுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதத்தில், புதுமையான குரல்வளம் கொண்ட பாடகர், பாடகிகளை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். தகுதியும், திறமையும் வாய்ந்த புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக, 'வாய்ஸ் பேங்க்' என்ற 'குரல் வங்கி' தொடங்க உள்ளேன்.
Post a Comment