சினிமா தியேட்டர் ரகளை வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு ஜாமீன்

|

Bail Actress Buvaneswari

சென்னை: சினிமா தியேட்டரில் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை புவனேஸ்வரி, படம் பார்க்கச் சென்றார். தியேட்டர் வாசலில் புவனேஸ்வரியின் கார் நுழைந்தபோது, முன்னால் சென்ற கார் மீது மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த காரில் சென்ற குமார் என்ற வாலிபருடன் திடீரென மோதலில் ஈடுபட்டார்.

அப்போது புவனேஸ்வரியுடன் காரில் சென்றவர்கள் குமாரை சரமாரியாக தாக்கி, தியேட்டரை சூறையாடி ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

புவனேஸ்வரியுடன் வந்தவர்கள் போலீசாரின் ஜீப் சாவியை எடுத்துக் கொண்டு காரில் தப்பினர்.இதுதொடர்பான வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த ரூ.1 1/2 கோடி மோசடி புகாரிலும் புவனேஸ்வரி கைதானார். கார் மோசடி வழக்கிலும் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு புவனேஸ்வரி மற்றும் அவருடன் கைதான 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதி சிவானந்த ஜோதி, புவனேஸ்வரிக்கும் அவருடன் கைதான 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தாலும் மற்ற 2 வழக்குகளிலும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் புவனேஸ்வரி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருப்பார்.

அடுத்தடுத்து வழக்குகள்

இதற்கிடையே புவனேஸ்வரி மீது மற்றுமொரு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் அளித்த புகாரின் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது. எனவே அடுத்தடுத்து மேலும் சில வழக்குகளில் அவர் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

Post a Comment