பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு, செயலாளர் டி சிவா உள்ளிட்டோர் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் தந்தனர்.
லிங்கா படத்தை திருச்சி தஞ்சையில் விநியோகித்த நிறுவனத்தின் பங்குதாரரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளே படத்துக்கும் அதன் நாயகன் ரஜினிக்கும் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். தனக்கு சேரவேண்டிய தொகை என பெரிய அளவில் நஷ்ட ஈடும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை வெளியிட, தனக்கு மேலும் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டுவதாகவும், திரையரங்கு உரிமையாளர்களை அதற்கு தூண்டுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் குற்றம்சாட்டியது.
பாயும் புலி படத்துக்கு முட்டுக்கட்டை மேலும் நீடிக்கவே, அதற்குக் காரணமான சிங்காரவேலன் மீது இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பிஎல் தேனப்பன், எஸ் கதிரேசன், வேந்தர் மூவீஸ் மதன் உள்பட பல நிர்வாகிகளும் இணைந்து இந்தப் புகாரை கமிஷனர் ஜார்ஜிடம் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Post a Comment