சன் பிக்சர்ஸ் எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன!

|

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சன் பிக்சர்ஸ் எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன!

5/19/2011 4:03:17 PM

சன் பிக்சர்ஸ் தயாரித்த  எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன. மொத்தம் அறிவிக்கப்பட்ட 36  விருதுகளில் 13ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன. 58வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 'எந்திரன்' படத்துக்கு 2 விருதுகளும் சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு 6 விருதுகளும் கிடைத்தன.  சிறந்த நடிகர் விருதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் (ஆதாமின்டே மகன் அபு) இணைந்து தனுஷும், சிறந்த இயக்கம், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறனும் பெற்றுள்ளனர்.

சன் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான 'எந்திரன்' உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தயாரிக்காத அளவுக்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மெகா ஹிட்டான இந்தப் படத்துக்கு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அவ்விருதுகளை முறையே ஸ்ரீனிவாஸ் மோகன், சாபு சிரில் பெறுகின்றனர்.

சன் பிக்சர்சின் 'ஆடுகளம்' படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன. ஆடுகளம் படத்தில்  நடித்த கவிஞர் ஜெயபாலன், ஜூரி விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக, 'தென்மேற்கு பருவக்காற்று' தேர்வு பெற்றுள்ளது. சரண்யா, வைரமுத்து ஆகியோரும் விருது பெற்றுள்ளனர். தேசிய விருதுகளில் கணிசமான விருதுகளை தமிழ்ப்படங்கள் பெற்றது மட்டுமின்றி, மலையாளத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம்  தென் இந்திய  படங்களே இம்முறை அதிகமான விருதுகளை தட்டிச்சென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா இதுவரை தொடாத புதிய சிகரம்

தமிழ் திரைப் படங்களுக்கு இவ்வளவு அதிகமான தேசிய விருதுகள் இதுவரை கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 36 விருதுகளில் 13 விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது இதுவே முதல்முறை. அதில் 8 விருதுகள் சன் பிக்சர்ஸ் படங்களுக்கு கிடைத்திருக்கிறது.  தமிழ் படங்களுக்கு இத்தனை தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு பல்வேறு திரைத்துறை பிரமுகர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

விருது பெற்றவர்கள் விவரம்

சிறந்த படம்        :    ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர்        :    தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர்    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு    :    தினேஷ் (ஒத்த சொல்லால… ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங்    :    கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த பொழுதுபோக்கு படம்    :    தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம்    :    சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு        :    மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை        :    சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர்    :    தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர்    :    வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை        :    சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு    :    சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்    :    ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம்    :    ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர்    :    விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி  விருது         :    வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).

 

Post a Comment