டயாலிஸிஸ் காரணமாக ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்! - மருத்துவர்கள் அறிவிப்பு

|

Tags:


சென்னை: டயாலிஸிஸ் காரணமாக ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ரஜினியின் உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 13-ந் தேதி ரஜினிகாந்த் குடல் மற்றும் இரைப்பை பிரச்சினையால், உடல்நலம் இன்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை முழுவதுமாக டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்து, என்ன பிரச்சினை என்பதை தெரிந்து கொண்டனர்.

அவருக்கு நீர்ச்சத்து அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

முக்கியமானதாக கருதப்படும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்டவை சரியான அளவு உள்ளன. அவர் உடல்நிலை சரியாகி இன்னும் 2 நாட்களில் தனி அறைக்கு திரும்புவார் என்று மிகவும் திடமாக நம்புகிறோம்.

உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

எந்த நோய் வந்தாலும், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்தால் நோய் குணமாகிவிடும். அதைப் போலத்தான் ரஜினிக்கும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிந்தது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை பயன் உள்ளதாக இருக்கிறது.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'தலைவரை ஒருமுறை காட்டுங்கள்....'

ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், நேற்று ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு குவிந்தனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறைய பேர் குவிக்கப்பட்டனர்.

அனுமதி சீட்டு வைத்திருந்த பார்வையாளர்கள் மட்டுமே ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை உள்ளே விடவில்லை. ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அறிய, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் நிறைய பேர் அங்கு குவிந்தனர். இதனால், மருத்துவமனை வளாகமே நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

தேவையில்லாத வதந்தி

ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற ரசிகர்கள் சிலர், ரஜினி நலம்பெற வேண்டி, அச்சடிக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் உள்ளவர்களிடம் வழங்கினார். இதுகுறித்து, ரசிகர் ஒருவர் கூறும்போது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக குணமடைய வேண்டும். தேவையில்லாத வதந்தியை சிலர் பரப்புகிறார்கள். அவர் நன்றாக குணமடைந்து வந்து, மீண்டும் 'ராணா' படத்தில் நடிப்பார்'' என்றார்.

சில ரசிகர்கள் கூறும்போது, "எங்கள் தலைவரின் உண்மையான உடல்நிலை குறித்து யாருமே சரியாக சொல்வது இல்லை. இதனால், குழப்பமாக உள்ளது," என்றனர்.
 

Post a Comment