8/22/2011 11:28:45 AM
கே.டி.வி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் நிறுவனத்துக்காக லோகநாதன் தயாரிக்கும் 3 டி படம், 'அம்புலி'. முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அஜெய், ஸ்ரீஜித் ஹீரோக்கள். சனம், ஜோதிஷா ஹீரோயின்கள். இசை: கே.வெங்கட் பிரபு சங்கர், சாம் சி.எஸ்., சதீஷ், மெர்வின். ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் பாடல்களை வெளியிட்டனர். பிறகு இப்பட நிறுவனம் சார்பில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். இயக்குனர் சேரன் பேசியதாவது:
'மை டியர் குட்டிச்சாத்தான்' 3 டி படத்துக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த 'அன்னை பூமி' 3 டி படம் வந்தது. டெக்னிக்குகள் நிறைய வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழில் ஏன் அதிகமாக 3 டி படங்கள் உருவாகவில்லை என்று தெரியவில்லை. நானும் 3 டி படம் இயக்கப் போகிறேன். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டேன். கலையை ரசிக்கும் எண்ணம் மாறி, பொழுதுபோக்கிற்காக மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெவ்வேறு புதிய முயற்சிகள் செய்து, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு படங்கள் தர வேண்டும். இவ்வாறு சேரன் பேசினார். விழாவில் பார்த்திபன், நமீதா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், யுடிவி தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment