8/23/2011 9:14:19 AM
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடக்கிறது. வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள், பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் உண்ணாவிரதம் இரு ந்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகம் சார்பில் அன் னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அண்ணா சாலையிலுள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில், இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க துணைத் தலைவர் சேரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ''இந்திய மக்களின் உணர்வுகளை அன்னா ஹசாரே பிரதிபலிக்கிறார். அவர் சொல்வது போல், வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இது, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை. இதற்கு அரசியல் சாயமும் பூச வேண்டாம். இன்று நடக்கும் உண்ணாவிரதத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். இன்று வழக்கம் போல் படப்பிடிப்புகள் நடக்கும்'' என்றார். கேயார் பேசுகையில், 'எல்லாருடைய கருத்துகளையும் கேட்டுத்தான் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இது உணர்வுப்பூர்வமான விஷயம். எல்லா அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது' என்றார்.
Post a Comment