கடந்த ஆண்டு வெளியான படங்களில், சினிமா ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்த படம் தா. நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற படம் இது.
இந்தப் படத்தை இயக்கிய ஆர் கே சூர்ய பிரபாகரின் அடுத்த படம் இன்று கோவையில் பூஜையுடன் தொடங்கியது.
இரண்டு நாயகர்கள், மூன்று நாயகிகள் இடம் பெறும் இந்தப் படத்தின் கதை உண்மையிலேயே வித்தியாசமானதுதான்.
ஒருவனின் இன்பம் துன்பம் இரண்டையுமே அவனுக்குத் தெரியாத யாரோ 6 பேர் நிர்ணயிக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமற்றவர்களாக, எந்தெந்த தேசங்களிலோ வசிப்பவர்களாகக் கூட இருக்கலாம். இந்த தியரி எப்படி இந்த இரு ஹீரோக்களை பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமான ஸ்கிரிப்டாக்கியிருக்கிறார் சூர்ய பிரபாகர்.
"கேட்கும்போது இது ஏதோ கற்பனை கதை என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் என் நண்பன் வாழ்வில் நடந்த கதை இது. இன்றும் அந்த நண்பனை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். படத்தில் எந்தப் பகுதியும் வலிந்து திணித்தது போல இருக்காது. காமெடி, காதல், ஆக்ஷன் எல்லாமே இயல்பாக அமைந்திருக்கும். நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்," என்கிறார் சூர்ய பிரபாகர்.
கோவையைச் சேர்ந்த டாக்டர் பி அனந்த கிருஷ்ணன் தனது ரைட்லைன்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பெயர் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது.
கோவையில் இன்று நடந்த படத்தின் பூஜையில், வாக்கப்பட்ட சீமையிலே படத்தைத் தயாரித்த லிங்க்ஸ் அயூப் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
Post a Comment