பெங்களூரு: பெங்களூருவில் கன்னட திரைப்பட இயக்குநரை செருப்பால் அடித்த நடிகை நயானாவை போலீசார் கைது செய்தனர்.
கன்னட சினிமா இயக்குனர் ரிஷி. இவர், "கொட்டலாலோ பூ காய்" என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி வந்தார். இதன் கதாநாயகியாக, நயானா கிருஷ்ணா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததால், திரைப்படம் வெளியீடு சம்பந்தமாக, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலுள்ள ஓட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு இதில், திரைப்படம் தொடர்பானவர்கள் உட்பட, பலரும் கலந்து கொண்டனர்.
மோசடி புகார்
அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை நயானா இயக்குநர் ரிஷி மீது திடீரென குற்றம் சாட்டினார். "கொட்டலாலோ பூ காய் திரைப்படத்துக்காக, இயக்குனர் ரிஷி, என்னிடம், எட்டு லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. எனக்கு திரைப்பட வினியோக உரிமையை தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தார்; அதுவும் தரவில்லை. என்னை அவர் மோசடி செய்து விட்டார், என கூறவே இயக்குனர் ரிஷி அதிர்ச்சியடைந்தார்.
செருப்பால் அடித்த நடிகை
நயானா கூறுவதை ரிஷி மறுத்தார். இதனையடுத்து நயானாவுடன் வந்தவர்களுக்கும், ரிஷிக்கும் இடையே கைகலப்பு நடந்தது. முதலில் நடிகையின் உதவியாளர், ரிஷியை தாக்கினார். ஆத்திரமடைந்த நயானா, தன் செருப்பை கழற்றி, ரிஷியை மாறி மாறி அடித்தார். இதை எதிர்பாராத ரிஷி, அறையிலிருந்து ஓட்டம் பிடித்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த ஓட்டல் அறையில், ஒரே களேபரமானது. இந்த ரகளையால், பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.
கைது செய்த போலீஸ்
நடிகை கும்பலிடமிருந்து தப்பித்த ரிஷி, ஓட்டலின் வெளியே நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறினார். அந்த நேரத்திலும், நடிகையும், அவருடன் வந்தவர்களும் ரிஷியை தாக்கினர். இதற்கிடையில், உப்பார்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆட்டோவில் இருந்த இயக்குனரை மீட்டு, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து உப்பார்பேட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நடிகை நயானாவையும், உறவினர்களையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
ஏற்கனவே தகராறு
நடிகை நயானாவுக்கும், இயக்குநர் ரிஷிக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இயக்குநர் பலமுறை நயானாவை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment