4/30/2011 10:58:23 AM
நடிகர் கார்த்தி ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் கொடுமுடி அருகே கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் நேற்று நடந்தது. நடிகர் சிவகுமார் லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிஇ படித்த அவர், அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றுள்ளார். கார்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனியை மணக்கிறார். ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவரது தம்பி ராம்குமார், சென்னை லயோலா கல்லூரியில் எம்பில் படித்து வருகிறார்.
கார்த்தி ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மதியம் மணமகள் இல்லத்தில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மூத்த மகன் நடிகர் சூர்யா, தங்கை பிருந்தா, அவரது கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் குமாரசாமி கவுண்டம்பாளையம் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மணப்பெண் வீட்டுக்கு வந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கார்த்தி, சூர்யா வருவதை அறிந்த கிராம மக்களும் ரசிகர்களும் ஏராளமானோர் குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார்த்தி ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா வளாகத்தில் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது.
Post a Comment