சென்னை: சன் டிவியில் இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணி வரை திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவெ கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, இத்தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இன்று பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், விடுமுறை தினமான இன்று வாக்காளர்கள் சினிமா பார்க்க தியேட்டர் சென்று விடாதபடி இருக்க இன்று மாலை வாக்களிக்கும் நேரம் முடியும் வரை தியேட்டர்களை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது
ஆனால், தியேட்டர்களுக்கு லீவு விட்டால் என்ன நாங்கள் இருக்கிறோம் என சேனல்கள் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.
சீரியல்களின் ஆக்கிரமிப்பு...
சன்டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் சமீபத்தில் சனிக்கிழமை வரை நீட்டிக்கப் பட்டுள்ளன. இவை விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளை ஆக்கிரமித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
சிறப்புத் திரைப்படம்....
ஆனால், தேர்தல் நாளான இன்று மற்ற அரசு விடுமுறை நாட்களைப் போல் காலையில் திரைப்படம் ஒளிபரப்புகிறது சன் டிவி.
ப்ரண்ட்ஸ்...
இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘ப்ரண்ட்ஸ்' ஒளிபரப்பாகிறது.
அப்புறம் சீரியல் தான்....
படத்தைத் தொடர்ந்து மீதமுள்ள சீரியல்கள் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மீண்டும் வழக்கம் போல 3 மணி சுமாருக்கு மற்றொரு படம் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.
பெண்கள் எண்ணிக்கை...
காலையில் சீரியல் கட்டாவதால் வாக்குச்சாவடியில் பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
தியேட்டர் வரலாற்றில் முதல்முறையாக...
தமிழ்நாட்டில் தேர்தலுக்காக தியேட்டர்கள் மூடப்படுவது இதுவே முதன்முறையாகும். தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.