சென்னை: தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை வடிவேலு இழிவுபடுத்தவில்லை என்று இயக்குநர் யுவராஜ் தயாளன் தெரிவித்துள்ளார்.
வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தணிக்கை குழு அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.
இப்படத்தில் வடிவேலு தெனாலிராமனாகவும், கிருஷ்ண தேவராயராகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்புக்கு தெனாலிராமன் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "தெனாலிராமன் படத்துக்கு வீண் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி இருப்பதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்த படத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி காட்சிகளே இல்லை. வடிவேலும் கிருஷ்ண தேவராயரை விமர்சிக்கவில்லை. இந்த படம் தெனாலிராமன் பற்றிய கதை.
படத்தை எதிர்ப்பவர்களுக்கு திரையிட்டுக் காட்ட இருக்கிறேன். படத்தை பார்க்காமலேயே எதிர்ப்புகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தெனாலிராமன் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.
வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு படம் ரிலீசாகும் நேரத்தில் எதிர்ப்பு கிளம்புவது இப்போதைய உத்தியாகிவிட்டது," என்றார்.