மும்பை: பாகிஸ்தான் சிறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் சகோதரி மற்றும் மகள்கள் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்து பேசினர்.
1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 பேர் பலியான 2 வெடிகுண்டு தாக்கதல்களில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியரான சரப்ஜித் சிங்கை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். பின்னர் பாகிஸ்தான் ராணுவச் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் சுர்ஜித் சிங் என்பவரை விடுதலை செய்கிறோம் என்று அறிவிப்பதற்கு பதிலாக சரப்ஜித் சிங்கை விடுவிக்கப் போகிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த குழப்பம் தீர்ந்து சுர்ஜித் சிங் விடுதலையாகி தனது குடும்பத்தாருடன் சேர்ந்துவிட்டார். இந்நிலையில் சரப்ஜித் சிங்கை விடுவிக்குமாறு பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாகிஸ்தான் அரசு, அதிபர் சர்தாரிக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக போராடி வரும் அவரது சகோதரி தல்பீர் கௌரும், சரப்ஜித்தின் மகள்கள் பூனம் மற்றும் ஸ்வப்னதீப் ஆகியோரும் சல்மான் கானை தபாங் 2 ஷூட்டிங்ஸ்பாட்டில் சந்தித்து பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி மனு ஒன்றை பாகிஸ்தான் அரசிடம் கொடுக்க சல்மான் கான் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment