பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான்கானுக்கு ஒரு எபிசோடுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசனில் ஒரு கோடி ரூபாய் அதிகமாம்.
அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் சின்னத்திரை தொகுப்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். நிகழ்ச்சி பிரபலமடைகிறதோ இல்லையோ நடிகர்களின் காட்டில் பணமழைதான். ஒரு எபிசோடுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பிக் பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு ஒரு எபிசோடுக்கு 3.8 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் தர முன்வந்துள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். இதன் மூலம் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர்களின் வரிசையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் சல்மான்கான்.
அமீர்கானும், ஷாருக்கானும் சின்னத்திரை நிகழ்ச்சிக்காக ஒரு எபிசோடுக்கு 3 கோடி சம்பளம் பெற்றனர். ஹிருத்திக் ரோஷன் 2 கோடி ரூபாயும், அக்சய் குமார் 1.5 கோடி ரூபாயும் பெற்றனர். அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 100 கோடி ரூபாய் வழங்கினார்கள்.
பிக் பாஸ் சீசன் 5ல் சல்மான்கானுடன் சஞ்சய் தத் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த சீசன் 6ஐ சல்மான்கான் தனியாக தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment