என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் என்னுடைய ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்குள்ளது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கூறியுள்ளார். ஜெயா டிவியில் என் திரைப்பயணம் நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னை செதுக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 9 மணிக்கு என் திரைப்பயணம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்துறையில் வெற்றி பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் பங்கேற்று தங்களில் திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்தவாரம் இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பங்கேற்று தனது அனுபவங்களை பேசினார்.
7ம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வீட்டுப்பாட நோட்டில் கதை எழுதி வைத்ததை கூறிய சமுத்திரகனி அதனைக் கண்டு ஆசிரியர் தம்மை திட்டவோ அடிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக அந்த கதையை எல்லோருக்கும் படித்து காட்டச் சொன்னார். அன்றைக்கு மட்டும் அந்த ஆசிரியர் தனக்கு தண்டனை கொடுத்திருந்தால் தன்னால் சிறந்த கதை ஆசிரியராக வளர்ந்திருக்க முடியாது என்றார்.
உன்னைச் சரணடைந்தேன் படத்திற்கு சிறந்த கதாசிரியர் விருது கிடைக்க இந்த சம்பவம் ஒரு காரணமாக அமைந்தது என்றார். ‘சாட்டை' படத்தில் ஆசிரியர் வேடம் ஏற்று நடிக்க காரணம் தன்னுடைய ஆசிரியர்கள்தான் என்று கூறிய சமுத்திரகனி ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி காலம் வரை தனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் பெயர்களை கூறினார்.
இன்றைக்கும் தன்னுடைய ஆசிரியர்கள் சிறந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக இருப்பதாக கூறிய சமுத்திரகனி தான் இயக்கிய நாடோடிகள் திரைப்படத்தில் இரண்டு ஆசிரியர்களை நடிக்க வைத்திருப்பதை நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் ரோல்மாடலாக இருப்பார்கள். தன்னுடைய ஆசிரியர்கள்தான் தன்னுடைய ரோல்மாடல். அவர்கள்தான் தன்னை செதுக்கினார்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் சமுத்திரகனி.
Post a Comment