ஜெயம் ராஜாவா... அவர் என்னதான் வெற்றிப் படம் கொடுத்தாலும், அது ரீமேக்தானே... அவர் ரீமேக் ராஜா என்றுதான் தமிழ் சினிமாவில் பேச்சு நிலவியது.
அதை உடைத்தெறிய வேண்டும் என்பதில் ராஜா மிகத் தீவிரமாக இருந்தார். வேலாயுதம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, எனது அடுத்த படம் நிச்சயம் ஒரிஜினல் கதை, திரைக்கதையுடன் வரும் என்று அறிவித்தார்.
அதற்கேற்ப தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மிகத் தீவிரமாக கதை - திரைக்கதையை உருவாக்கி வந்தார். அந்தப் படம்தான் தனி ஒருவன். இந்தப் படத்துக்கான வசனங்களையும் எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து ராஜா எழுதினார். இத்தனை காலமும் ஜெயம் ராஜா என்ற பெயரில் தன் படங்களை இயக்கியவர், இந்த முறை தன் தந்தை மோகனின் பெயரைச் சேர்த்துக் கொண்டு மோகன் ராஜாவாக வந்தார்.
இதுவரை ராஜா இயக்கிய படங்களிலேயே பெரிய வெற்றிப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்த தனி ஒருவன். அதேபோல ஜெயம் நடித்த படங்களிலேயே, பேராண்மைக்கு நிகரான படம் என்ற பாராட்டும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
தனி ஒருவனின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய பலரும் போட்டி போடுகின்றனர். சல்மான் கான் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்துள்ளார். நிச்சயம் அங்கும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள்தான் காரணம் என்று மோகன் ராஜா கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "என் வளர்ச்சியில் மீடியாவின் பங்கு அதிகம். என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் கூட என் வளர்ச்சியில் கொண்ட அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்திலும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் பங்கிருக்கிறது. அதற்கு நான் தலை வணங்குகிறேன்.. சொந்தக் கதை முயற்சி தொடரும்," என்றார்.
Post a Comment