கமலுடன் பேச தமிழக அரசு தயாராக இல்லை?!

|

Is Kamal Approaches Tn Govt

சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவிருக்கிறது.

அதற்கு முன், அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.

ஆனால் கமல், நேற்று வரை இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச தயாராக இருப்பதாக அறிவித்தாரே தவிர, அரசை அணுகப் போவதாகக் கூறவே இல்லை. அதே போல அரசும் கூட அவருடன் பேச விரும்பாத சூழலே உள்ளது.

ஆனால் இன்று அவர் அரசை அணுகி, விஸ்வரூபத்தை சுமூகமாக வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து கமல் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "காட்சிகளை வெட்டிவிட்டு இந்தப் படத்தை வெளியிடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. மேலும் அரசை அணுகும் திட்டம் எதுவும் கமலிடம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்," என்றனர்.

இதற்கிடையில் அரசும் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிடவோ, முடிவிலிருந்து பின்வாங்கவோ தயாராக இல்லை என்று தெரிகிறது. துப்பாக்கியில் காட்சிகளை வெட்டியது போல இந்தப் படத்திலும் வெட்டிவிட்டுப் போவதுதானே ... ஏன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறார் கமல்? என்றுதான் திருப்பிக் கேட்டுள்ளார்கள் அரசுத் தரப்பில் பேசியவர்கள்.

இதற்கிடையில் இன்றைய நீதிமன்ற விசாரணையில் கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படம் வெளி வருவதற்காக ஏக முறைகேடுகளைச் செய்துள்ளார் கமல் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளதால், கமலுக்கு உச்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு வெகு விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள். பார்க்கலாம்!

 

Post a Comment