ஹைதராபாத்: விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் விஸ்வரூபத்துக்கு தடை அமலில் இருந்தாலும், பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கேரளா, கர்நாடகத்தில் இந்தப் படத்தை வெளியிட தடை ஏதுமில்லை. ஆனால் கர்நாடகத்தில் இரண்டு ஷோக்களுக்குப் பிறகு இந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆந்திராவில் ஒரு ஷோ ஓடியது. அடுத்த இரு தினங்களில் மீண்டும் திரையிடப்பட்டதாகக் கூறினர். ஆனால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
கேரளத்திலும் இதே நிலைதான். அங்கு 83 அரங்குகளில் திரையிடப்பட்டது இந்தப் படம். இப்போது பாதிக்கும் மேற்பட்ட அரங்குகளில் நிறுத்தப்பட்டுவிட்டது.
அங்கு திரைப்படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதும் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதுமாக கண்ணாமூச்சு நடந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில்ஆந்திராவில் இந்தப் படத்தை தடை செய்துவிட வேண்டும் என்று கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் முகமது ஹாஜி என்பவர். இவர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெரிய வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வழக்கு மனுவில், "கமல் எடுத்துள்ள விஸ்வரூபம் படம் இஸ்லாமியரின் நம்பிக்கைகள், உணர்வுகளை நேரடியாகத் தாக்குகிறது. இந்தப் படத்தை முற்றாக தடை செய்து மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
Post a Comment