ரஜினியுடன் அமரிக்க மேரிலான்ட் துணைச் செயலர் சந்திப்பு - அரசு விருந்தினராக வருமாறு அழைப்பு!

|

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

மேலும் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் ரஜினி.

rajini visit us soon
கவர்னர் மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் பல சாதனைகளைச் செய்து, அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் நீங்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும், எல்லா வளமும் பெற்று, உலகெலாம் பரவியிருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் என்று எங்களின் மேரிலாண்ட் மாகாண அரசாங்க வாழ்த்துச் சான்றின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் சான்றை ரஜினியிடம் டாக்டர் ராஜன் வழங்கினார்.

மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற ரஜினி, நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினியிடம் பல கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டார் டாக்டர் ராஜன்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு நிகராக சூப்பர் ஸ்டாரின் படங்கள் எப்படி அமெரிக்கா மற்றும் உலக மக்களால் பாராட்டப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன என்பதை டாக்டர் ராஜன் விளக்கியபோது, மகிழ்ச்சி தெரிவித்தார் ரஜினி.

22 வயது இளைஞர் ரஜினி...

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் தரமான வாழ்க்கை என்பது 40-க்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது - இது அமெரிக்காவில் பிரபல பழமொழி. அப்படிப் பார்க்கும் போது நீங்கள் 62 வயதைத் தொட்டிருந்தாலும், நீங்கள் 22 வயது இளைஞர்தான்... என டாக்டர் ராஜன் கூறியபோது, மனம் விட்டுச் சிரித்தார் ரஜினி.

இந்தியர்களுக்கு அமெரிக்காவில் எத்தகைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை விரிவாக டாக்டர் ராஜன் விளக்கியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டார் ரஜினி

அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் டாக்டர் ராஜனிடம் ரஜினி விசாரித்தார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் - தமிழர் அதுவும் நம்ம புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜன்தான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

ரஜினிடம் டாக்டர் ராஜன் பேசும்போது, "தமிழர்களின் பெருமை நீங்கள்.. உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். ஹாலிவுட்டிலேயே கோலோச்சும் அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை ஏற்காமல் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழையும் தமிழர் நலன் காக்கவும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, பிற நாட்டினரும் கூட மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் படங்களைப் பார்க்கின்றனர்," என்றார்.

மேரிலான்ட் அரசின் அழைப்பு மற்றும் வாழ்த்துக்கு டாக்டர் ராஜனிடம் நன்றி தெரிவித்த ரஜினி சந்திப்பு முடிந்ததும் டாக்டர் ராஜனை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்பு குறித்து டாக்டர் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்பும் உபசரிப்பும் என்னை வரவேற்ற விதமும் நெகிழ வைத்துவிட்டன. அவர் பெரும் கலைஞர் மட்டுமல்ல, மாபெரும் மனிதர். எளிமையின் சிகரம். உன்னதமானர். அவரைப் போன்ற பண்பாளரைச் சந்தித்தது மிகுந்த நிறைவாக உள்ளது. தமிழர்களின் பெருமை நமது சூப்பர் ஸ்டார் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். அவரை அமெரிக்க அரசு விருந்தினராக வரவேற்பதை நானும் எங்கள் அரசும் கவுரவமாகக் கருதுகிறோம். அமெரிக்கா அவருக்கு மிகப் பெரிய மரியாதையைச் செய்யக் காத்திருக்கிறது," என்றார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சார்லி, டாக்டர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Post a Comment