தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க 40-வது ஆண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. இயக்குனர்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார். பிறகு இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கே.பாலசந்தர், பாரதிராஜா முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ராம நாராயணன், கே.விஸ்வநாத், நாகபரணா, ஹரிஹரன் தலைமை வகித்தனர். எஸ்.பி.முத்துராமன் வரவேற்றார். இசை நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் பாட்டுப் பாடி, தொடங்கி வைத்தார். மலையாள நடிகர் மம்மூட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சரத்குமார், நடிகை சந்தியா மற்றும் அனுராதா ஸ்ரீராம், திப்பு, சின்மயி, சுசித்ரா, மாலதி, ரஞ்சித் உட்பட பல பாடகர், பாடகிகள் பாடினர். இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தேவா, சபேஷ்-முரளி, யுவன்சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தினா, கார்த்திக் ராஜா உட்பட பலர் இசை அமைத்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில், வெளிநாட்டு லேசர் நடனம் நடைபெற்றது. பின்னர் பாரம்பரிய இசையான தப்பாட்டம், களரி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாலசந்தர், பாரதிராஜா படங்களின் பாடல்களுக்கு நடிகைகள் தேஜாஸ்ரீ, அமலா பால், ராம்ஜி, சஞ்சீவ், சுஜா, சஞ்சனா சிங், தேவயானி, ரோஜா, ராஜ்கபூர், ரமேஷ்கண்ணா, பப்லு உட்பட பலர் ஆடினர். சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிங்கப்புலி, மயில்சாமி, சித்ரா லட்சுமணன், இளவரசு நடித்த காமெடி நாடகம் இடம்பெற்றது. பின்னர், காயத்ரி ரகுராம் குழுவினரின் நடனம் இடம்பெற்றது.
வசந்த் இயக்கிய பாலசந்தர், பாரதிராஜா பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. விழாவில், பழம்பெரும் இந்தி இயக்குனர் கோவிந்த் நிகலானி, கவுரவிக்கப்பட்டார். அவருக்கு மணிரத்னம் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் 'எந்திரன்' பட பாடல்களுக்கு சமீரா ரெட்டி நடனம் ஆடினார். இயக்குனர் பார்த்திபன் கவிதை படிக்க, அதை மம்தா மோகன்தாஸ் பாடலாக பாடினார். அதற்கு ராஜேஷ் வைத்யா இசை அமைத்தார். விழாவில், தெலுங்கு இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.ராகவேந்திர ராவ், கோடி ராமகிருஷ்ணா, ஏ.கோதண்டராம ரெட்டி, கன்னட இயக்குனர்கள் துவாரகேஷ், நாகபரணா, கே.எஸ்.ராவ், மலையாள இயக்குனர் ஹரிஹரன், தமிழ் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராம நாராயணன் ஆகியோர் அவர்களது சாதனைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் மணிரத்னம், அகத்தியன், பாலா ஆகியோருக்கு தங்கத்திலான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ரஜினி-கே.பாலசந்தர், விக்ரம்-தரணி, தனுஷ்-வெற்றிமாறன், கார்த்தி-தமன்னா, பாரதிராஜா-இளையராஜா, விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகரன், சரத்குமார்-ராதிகா, ஆர்.கே.செல்வமணி-ரோஜா, கார்த்திக்-ராதா, விவேக்-நதியா, சத்யராஜ்-குஷ்பு, வாலி-எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் ருசிகர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இயக்குனர் லிங்குசாமி ஒரு காட்சியை விளக்க, அதற்கு இசை அமைப்பாளர் யுவன் இசை அமைக்க, நா.முத்துக்குமார் பாடல் எழுதினார். பாடல் உருவாகும் விதத்தை இப்படி செய்து காட்டினார்கள். வெங்கட் பிரபுவும், விஷ்ணுவர்தனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை விஜயசாரதி, இயக்குனர்கள் பிரியா.வி, ஆர்.கண்ணன், ஜெயம் ராஜா, தருண்கோபி, கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், பொன்வண்ணன் உட்பட பலர் தொகுத்து வழங்கினர்.