வளர்ந்து வரும் ரீ ரிலீஸ் கலாசாரம் 3/21/2011 10:32:54 AM
தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு மறு வெளியீடு (ரீ ரிலீஸ்) கலாசாரம் வளர்ந்து வருகிறது. மறு வெளியீடு என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மறு திரையீடு செய்வது வழக்கமான ஒன்று. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்து பெரிய வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது மறு வெளியீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏற்கெனவே வெளிவந்து ரசிகர்களை சென்று அடையாத அல்லது தோல்வியை தழுவிய படங்களை மறு வெளியீடு செய்யும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.
மக்கள் கவனத்தை பெறாமல் போன சில கவர்ச்சிப் படங்கள் வேறு பெயர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு சமீபத்தில் தியேட்டர்களில் ஓடியது. 'ஸ்வேதா கேர் ஆஃப் வெலிங்டன் ரோடு', 'அந்தரங்கம்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இது ஒரு புறம் இருக்க, சரியான திட்டமிடுதலுடன் வெளியிடப்படாத, அல்லது தோல்வியடைந்த படங்களை மறு திரையீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய 'தா' படம் மீடியாவால் பாராட்டப்பட்டது. ஆனால், அந்தப் படம் ஒருவாரம் கூட தியேட்டரில் ஓடவில்லை. இப்போது அந்தப் படத்தை மறு வெளியீடு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. 'நில் கவனி செல்லாதே', 'முன்தினம் பார்த்தேனே', 'நானே என்னுள் இல்லை' உட்பட சில படங்கள் மறு திரையீடலுக்கு தயாராகி வருகிறது.
'மிஷ்கின் இயக்கிய முதல் படமான 'சித்திரம் பேசுதடி' ரிலீசானசில நாட்களிலேயே படப் பெட்டிகள் திரும்பியது. படத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு தயாரிப்பாளர் அதை ரீ ரிலீஸ் செய்தார். 50 நாட்களை தாண்டி ஓடியது. 'ஒரு தலை ராகம்', 'சேது' போன்ற பல படங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், மறுவெளியீடு செய்ய சில தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள். அதில் வெற்றி பெறவும் கூடும்' என்கிறார் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.
'பொதுவாக சிறு பட்ஜெட் படங்கள்தான் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதுவும் சினிமா துறையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள், படம் வெளியிடும்போது சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு படங்களை வெளியிடுவதில்லை. உரிய முறையில் விளம்பரமும் செய்வதில்லை. அதனால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில படத்தின் இயக்குனர்கள், நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நல்ல படம் மக்களை போய் சேரவில்லை என்று கருதிக் கொண்டு மீண்டும் செலவு செய்து படத்தை வெளியிடுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறிதான்' என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.