சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தை விளம்பரத்துக்காக நான் பெரிதுபடுத்துவதாகக் கூறுவது மோசமானது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
மும்பையில் விஸ்வரூபம் சிறப்புக் காட்சிக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதிலிருந்து...
எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். பிரச்சனையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்திலும் நம்பிக்கை இல்லை.
விஸ்வரூபம் பிரச்சனையில் விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இப்போது இந்த விவகாரத்தில் முதல்வர் உதவ முன் வந்துள்ளதால் உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லை.
இந்தப் போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் சொன்னது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டோ, மிரட்டவோ அல்ல. உண்மையிலேயே இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன்.
எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, இந்திய தேசிய விருதையே விரும்புகிறேன்.
நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர்.
விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். அந்த அளவு புண்பட்டிருக்கிறேன்.
என் படங்களில் முஸ்லீம்களை நான் எப்போதுமே தவறாக காட்டியதில்லை. ஹே ராம் பார்த்தால் புரியும். இந்த சில தினங்களில் நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதை நானும் மீண்டும் சொல்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் எந்த நிறத்தில் வந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம்தான்.
விஸ்வரூபம் விவகாரத்தில் எந்த இஸ்லாமிய நண்பராவது கைது செய்யப்பட்டிருந்தால் உடனே விடுவிக்க வேண்டும்.
எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையில் தென்னகத்தில் உள்ள என் திரைத்துறை நண்பர்கள் மட்டுமல்ல, சல்மான், ஷாருக், மகேஷ் பட், மதூர் பண்டார்கள் என இங்கே உள்ளவர்களும் ஆதரவு தந்தனர். அவர்களுக்கு நன்றி என்றார் கமல்.